விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் பறிக்க சென்ற மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

தந்தைக்கு வீடியோ கால் செய்த சஞ்சய் சைகை மூலம் பூச்சி கடித்ததாக தெரிவித்தான்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ். சைதாப்பேட்டையில் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மகன் சஞ்சய் (வயது 13). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான சஞ்சய், விருப்பாட்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அருகம்புல் பறிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் விருப்பாட்சிபுரம் பூந்தோட்டம் பகுதிக்கு சென்றான். அப்போது புதரில் இருந்த விஷப்பூச்சி சஞ்சயை கடித்தது. இதுகுறித்து தனது தந்தைக்கு வீடியோ கால் செய்த சஞ்சய் சைகை மூலம் பூச்சி கடித்ததாக தெரிவித்தான். உடனடியாக அங்கு சென்ற குடும்பத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






