ரெயிலில் கல்வி சுற்றுலா சென்ற கேரள பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

கல்வி சுற்றுலா சென்ற கேரள பள்ளி மாணவன் சேலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
ரெயிலில் கல்வி சுற்றுலா சென்ற கேரள பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

சேலம்,

சேலம் அருகே உள்ள தின்னம்பட்டி ரெயில் நிலையம் பகுதியில் 16 வயது சிறுவன் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபண்ணா தலைமமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், அந்த மாணவன் கேரள மாநிலத்தை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது.

போலீசார் விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்தவர் நவுபல் கடம்போட். அவருடைய மூத்த மகன் நய்மு ரசீத் (வயது 16). இவர் சொரனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் பள்ளி விடுதியிலேயே தங்கி படித்து வந்தார்.

இந்த பள்ளியில் இருந்து 11 மாணவர்கள் ஐதராபாத்துக்கு கல்வி சுற்றுலா புறப்பட்டனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்களை 2 ஆசிரியர்கள் அழைத்து கொண்டு சொரனூரில் இருந்து கச்சிக்குடா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்-1 பெட்டியில் பயணம் செய்தனர். இந்த ரெயில் நேற்று காலை 6.40 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது.

காலை 10 மணி அளவில் ரெயில் ஜோலார்பேட்டை அருகே சென்ற போது மாணவன் நய்மு ரசீத்தை ரெயிலில் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அப்போதுதான் ரெயிலில் அடிபட்டு சிறுவன் ஒருவன் பிணமாக கிடந்த தகவல் உடன் வந்த ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மாணவனின் புகைப்படத்தை பார்த்து இறந்தது நய்மு ரசீத் என்பதை உறுதி செய்தனர். மேலும் மாணவன், ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்விச்சுற்றுலா சென்ற பிளஸ்-1 மாணவன் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com