மண்டல பூஜையில் மைக் பிடித்து பாடல் பாடிய அய்யப்ப பக்தருக்கு நேர்ந்த சோகம்

விநாயகர் கோவில் வளாகத்தில் மண்டல பூஜை விழா நடந்தது.
மண்டல பூஜையில் மைக் பிடித்து பாடல் பாடிய அய்யப்ப பக்தருக்கு நேர்ந்த சோகம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் வெங்கடேசன். இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். சபரிமலை கோவிலுக்கு செல்வதற்காக இவர் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.

ஆழ்வார்திருநகரி வாய்க்கால் கரை தெருவில் உள்ள கருணாகர விநாயகர் கோவில் வளாகத்தில் அய்யப்ப சுவாமியின் மண்டல பூஜை விழா நேற்று முன்தினம் இரவில் நடந்தது. இதில் பங்கேற்ற வெங்கடேசன் மைக் பிடித்து பக்தி பாடலை பாடினார். அப்போது மைக் வழியாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை சக பக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் போலீசார் விரைந்து சென்று, இறந்த வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்டல பூஜையில் அய்யப்ப பக்தர் மைக் பிடித்து பக்தி பாடலை பாடியபோது மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com