கியாஸ் கசிவால் ஏற்பட்ட விபரீதம்.. சிகிச்சை பலனின்றி தாய்-மகள் பலியான சோகம்

கியாஸ் கசிவு ஏற்பட்டு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் தாயும், மகளும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
சென்னை,
காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் லிங்கப்பன் பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர்கள் சங்கர்-கோமளா தம்பதியினர். இவர்களது மகள் மணிமேகலை (வயது 29). இவர், 2-வதாக கர்ப்பமடைந்ததால் பூமுடிப்பு நிகழ்ச்சிகாக தனது மகள் கிருபாஷினி (8) உடன் தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் கியாஸ் அடுப்பில் சுடுநீர் வைத்து எடுத்துக்கொண்டு குளியல் அறையில் வைத்து தனது மகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதில் மணிமேகலை மற்றும் அவரது மகளும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை மற்றும் அவரது மகள் கிருபாஷினி இருவரும் நேற்று பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






