

சென்னை,
சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் ரெயில் தண்டவாளத்தைக் கவனக்குறைவாக கடக்க முயன்ற 3 பேர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த 3 விபத்துகளும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை இஸ்மாயில் ஷெரிப் (வயது 57) என்பவர் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதேபோல், இன்று (சனிக்கிழமை) வில்லிவாக்கம் ரெயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தீபா (வயது 34) என்ற பெண் மீது அவ்வழியாகச் சென்ற ரெயில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு சம்பவத்தில், பெரம்பூர் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
இந்த 3 விபத்துகள் குறித்தும் தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பெரம்பூரில் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்தும், விபத்துகள் நடந்த விதம் குறித்தும் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.