

ஆவடி,
குடும்பத் தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 35). இவர், 2016-ம் ஆண்டு ஆவடியில் உள்ள 5-ம் பட்டாலியன் போலீஸ் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு அவர். அயல் பணியாக சென்னை குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவில் ஆவடி சரகத்தில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி அனிதா (33). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சத்யமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
கணவன்-மனைவி இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று மாலை இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அனிதா, கணவருடன் கோபித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த அரிகிருஷ்ணன். தனது நண்பர் ஒருவருக்கு போன் செய்து, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தகவல் சொல்லிவிட்டு, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார். கதவை உடைத்து உள்ளே சென்று அரிகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.