

சிவகங்கை,
மின்னல் தாக்கி 2 பெண் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள திருவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி சவுரியம்மாள். அதே பகுதியை சேர்ந்த அழகன் என்பவரின் மனைவி பெரிய கருப்பி. பெரிய கருப்பி மற்றும் சவுரியம்மாள் அகிய இருவரும் இன்று வயலில் வேலை பார்த்து வந்தனர்.
அந்தவேளை, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, மழையில் இருந்து தங்களை காத்து கொள்வதற்காக இருவரும் அருகிலிருந்த மரத்திற்கு அடியில் இருவரும் ஒதுங்கினர். அந்தவேளை, திடீரென மின்னல் மரத்திற்கு அடியில் இருவரையும் மின்னல் தாக்கியது. இதில், பலத்த காயமடைந்த சவுரியம்மாள் மற்றும் பெரிய கருப்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்தவர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.