

கடலூர்,
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஆடு மேய்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அடுத்த துணிசரமேடு கிராமம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி ஆறுமுகம். இவரது மனைவி ஞானசுந்தரி (38). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. அப்போது ஞானசுந்தரி அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு, வயல்வெளியில் இருந்து பிரதான சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஞானசுந்தரி மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சாலையிலேயே சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழையின்போது மின்னல் தாக்கி குடும்பத் தலைவி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.