பீரோ மீது இருந்த புத்தகத்தை எடுத்தபோது விபரீதம்.. 6-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு சிவகிருஷ்ணன் (வயது14) என்ற மகனும், நந்தனா (11) என்ற மகளும் உண்டு. சித்தரேவில் உள்ள அரசு பள்ளியில் சிவகிருஷ்ணன் 9-ம் வகுப்பும், நந்தனா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று நந்தனாவின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். சிவகிருஷ்ணனும் வெளியே சென்றுவிட்டான். பின்னர் நந்தனா பள்ளிக்கு புறப்பட்டாள். அப்போது வீட்டில் இருந்த பீரோவின் மேற்பகுதியில் புத்தகம் ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.
நந்தனா கட்டிலில் நின்று கொண்டு பீரோ மீது இருந்த புத்தகத்தை எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி வீட்டின் உள்ளே துணி காய போடுவதற்காக கட்டியிருந்த கயிற்றில் விழுந்தார். இதில் மாணவியின் தலை கயிற்றில் சிக்கியது. அதிலிருந்து மீண்டுவர மாணவி போராடினார்.
ஆனால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சோக சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






