

சென்னை,
தாம்பரம் ரெயில்வே நிலையத்தில் ஓடும் ரெயிலில் வட மாநில இளைஞர் ஒருவர் ஏற முயன்றபோது கால் நழுவி விழுந்து உயிரிழந்தார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நாகோன் (வயது 17). அவர் தனது வட மாநில நண்பர்களுடன் இன்று தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவர் பயணம் செய்ய வேண்டிய ரயில், நடைமேடையில் இருந்து புறப்படத் தொடங்கியது. மெதுவாக சென்று கொண்டிருந்த அந்த ரயிலில் அவசர அவசரமாக ஓடிச் சென்று ஏற நாகோன் முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் நழுவி, ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதைக்கண்டு அங்கிருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அங்கிருந்த சில பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது நாகோன் “நான் இறந்து விடுவேன், என் குடும்பத்தினருக்கு தெரிவித்து விடுங்கள் ” எனக் கூறி தனது செல்போன் பாஸ்வேர்டை நண்பர்களிடம் பகிர்ந்தார்.
அதன்பின் சில நிமிடங்களில் நாகோன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் பயணிகள் ஏறவோ அல்லது இறங்கவோ வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் மீண்டும் எச்சரித்துள்ளது.