நாய்க்குட்டியின் நகம் கீறியதால் விபரீதம்: பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், வீட்டில் வளர்த்த நாய்க்குட்டியை சிகிச்சைக்காக தூக்கிச் சென்றபோது, அவரது தோளில் நாய்க்குட்டியின் நகம் பட்டுக் கீறல் ஏற்பட்டது.
நாய்க்குட்டியின் நகம் கீறியதால் விபரீதம்: பெண் உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே, சில்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகனின் மனைவி சுமதி (வயது 47). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்குட்டிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது அந்த நாய்க்குட்டியை சிகிச்சைக்காக சுமதி தூக்கிச் சென்றபோது, அவரது தோளில் நாய்க்குட்டியின் நகம் பட்டுக் கீறல் ஏற்பட்டது.

நாய்க்குட்டிக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டிருந்ததால், சிறிய நகக்கீறல் தானே என்று கருதி சுமதி அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கடந்த சில தினங்களாக அவருக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதால் மேல் சிகிச்சைக்காக கடந்த திங்கள்கிழமை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.

சுமதியின் உடல் சில்லாங்குளம் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ரேபிஸ் என்பது ஒரு தொற்றுநோய் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

வளர்ப்புப் பிராணிகள் கடித்தாலோ அல்லது கீறினாலோ முறையான மருத்துவ ஆலோசனை பெற்று தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com