ஆடிப்பெருக்குக்கு வந்து சென்ற போது பாிதாபம்: சரக்கு வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலி

ஆடிப்பெருக்குக்கு வந்து சென்ற போது, மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி புதுமாப்பிள்ளை பலியானார். மேலும் மனைவி படுகாயம் அடைந்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஏழுமரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் டிராவிட் (வயது 26). இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் டிராவிட் பணியாற்றி வந்தார்.ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிக்காக மாமியார் வீட்டுக்கு தனது மனைவியுடன் டிராவிட் சென்றார். இந்தநிலையில் நேற்று அவர் தனது மனைவியுடன் கூடலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். குன்னூர் காட்டேரி அடுத்த பால்கார லைன் அருகே சென்ற போது, கோவையில் இருந்து குன்னூர் நோக்கி எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தம்பதி சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தில் தலையில் அடிபட்டு டிராவிட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த மாரியம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற சரக்கு வாகனத்தை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். முன்னதாக விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






