தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் சாவு : ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் இறந்த சம்பவம் தொடர்பாக ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கேரளாவுக்கு விசாரிக்க சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகள் 5 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் சாவு : ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

3 யானைகள் சாவு

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அவை, உணவு, தண்ணீர் தேவைக்காக குடியிருப்பு மற்றும் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துகின்றன.

இதற்காக காட்டு யானைகள் ரெயில்தண்டவாளத்தை கடந்து செல்வது உண்டு. கோவையை அடுத்த நவக்கரை மாவுத்தம்பதி அருகே மரத்தோட்டம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கோவை-பாலக்காடு ரெயில்வே தண்டவாளம் ஏ பிரிவு செல்கிறது. அந்த தண்டவாளத்தை நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் 3 காட்டு யானைகள் கடக்க முயன்றன. அப்போது அந்த வழியாக வந்த மங்களூரு-சென்னை அதிவேக ரெயிலில் அடிபட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 யானைகள் பரிதாபமாக இறந்தன.

விசாரணை

இதில் 2 யானைகள் தூக்கி வீசப்பட்டன. ஒரு யானை தண்டவாளத்தில் சுமார் 100 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர்கள் இறங்கி பார்த்த போது, 3 யானைகள் இறந்தது தெரிய வந்தது. அதில் 25 வயது பெண் யானை, அதன் குட்டியான 8 வயது பெண் யானை, மற்றொன்று 12 வயதான தந்தம் இல்லாத ஆண் மக்னா யானை ஆகும்.

இது குறித்து தகவல் அறிந்த கோவை மண்டல முதன்மை வனபாதுகாப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம், கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மாற்று என்ஜின்

இதையடுத்து யானைகளின் உடல்களை பொக்லைன் எந்திரங்கள் மூலம் வனத்துறையினர் அப்புறப்படுத்தினர். ரெயில் என்ஜின் போத்தனூர் ரெயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ரெயிலுக்கு மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு அதே ரெயிலில் பயணிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர் சுபையர் மற்றும் துணை டிரைவர் அகில் ஆகிய 2 பேரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

கர்ப்பிணி யானை

இறந்த 3 யானைகளின் உடல்களும் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வனத்துறை மருத்துவ நிபுணர் டாக்டர் சுகுமார் தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 25 வயது பெண் யானை கர்ப்பமாக இருந்ததும், அதில் வயிற்றில் இருந்த சிசு யானை இறந்தநிலையில் எடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து யானைகளின் உடல்கள் பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி செல்லப்பட்டு அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 10 அடி ஆழத்துக்கு பெரிய பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.

டிரைவர்கள் மீது வழக்கு

இதற்கிடையில் ரெயில் என்ஜினின் வேகத்தை காட்டும் சிப்பை வனத் துறையினர் கைப்பற்றி உள்ளனர். யானை வழித்தடத்தில் நிர்ணயிக்கப் பட்ட 45 கிலோ மீட்டர் வேகத்துக்குள் தான் ரெயிலை இயக்க வேண்டும் ஆனால் அதிவேகமாக ரெயிலை இயக்கியதால் தான் யானைகள் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து 1972 வன உயிரின சட்டப்பிரிவின்படி என்ஜின் டிரைவரான கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சுபையர் (54), உதவி என்ஜின் டிரைவர் அகில் (31) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் சிறைபிடிப்பு

இந்த நிலையில் ரெயில் என்ஜின் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதற்கு, பாலக்காடு ரெயில்வே கோட்ட ரெயில் என்ஜின் டிரைவர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ரெயில் எந்த வேகத்தில் இயக்கப்பட்டது? என்று விசாரணை நடத்த நேற்று கோவையில் இருந்து கேரளாவுக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் 5 பேரை கேரளாவை சேர்ந்த என்ஜின் டிரைவர்கள் சிறைபிடித்தனர்.

அப்போது அவர்கள், ரெயில் என்ஜின் டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவோ, கைது நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்றும் வற்புறுத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து தமிழக வனத்துறை அதிகாரிகள் இரவில் விடுவிக்கப்பட் டனர். இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்ட என்ஜின் டிரைவர்கள் சுபையர், அகில் ஆகியோரை தமிழக வனத்துறையினர் விடுவித்தனர்.

தமிழகத்தில் ரெயிலில் அடிபட்டு யானைகள் இறந்த விவகாரம் ரெயில்வே மற்றும் வனத்துறை இடையே பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com