பாம்பன் ரெயில் பாலத்தில் முதல்முறையாக மின்சார என்ஜினுடன் ரெயில் இயக்கம்


பாம்பன் ரெயில் பாலத்தில் முதல்முறையாக மின்சார என்ஜினுடன் ரெயில் இயக்கம்
x

ராமேசுவரம்-ராமநாதபுரம் இடையே 80 கி.மீ. வேகத்தில் மின்சார ரெயில் சோதனை ஓட்டமும் நேற்று வெற்றிகரமாக நடந்தது.

ராமேசுவரம்,

தமிழகத்தில் பல்வேறு ரெயில் வழிபாதைகள், மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே 53 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்மயமாக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே நடைபெற்று வந்தன. கடல் நடுவே உள்ள பாம்பன் புதிய பாலமும் மின்சார ரெயில்கள் இயக்கும் வசதியுடன்தான் கட்டப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று தெற்கு ரெயில்வே எலக்ட்ரிக்கல் பிரிவு முதன்மை பொறியாளர் கணேஷ், கோட்ட கூடுதல் மேலாளர் நாகேசுவரராவ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மின்சார கட்டுப்பாட்டு அறை, வழித்தடம் ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ராமநாதபுரத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட சிறப்பு ரெயிலில் புறப்பட்டு வழிநெடுகிலும் அனைத்து தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளையும் பார்வையிட்டனர். உச்சிப்புளி பருந்து கடற்படை விமான தளம் அருகே உள்ள தண்டவாள பாதையிலும் ஆய்வு நடந்தது. பின்னர் மீண்டும் அங்கிருந்து சிறப்பு ரெயில் மூலமாக புறப்பட்டு மண்டபம் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்துவிட்டு பாம்பன் புதிய ரெயில் பாலத்திற்கு சிறப்பு ரெயில் வந்தடைந்தது.

இந்த ரெயிலானது தூக்குப்பாலத்தை கடந்ததும் நிறுத்தப்பட்டது., அங்குள்ள தொழில்நுட்ப இணைப்புகள் சரிவர செயல்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ராமேசுவரம் ெரயில் நிலையம் வரை அந்த ரெயிலில் சென்று மின்சார கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து நேற்று மாலை 4.40 மணி அளவில் ராமேசுவரத்தில் இருந்து 7 பெட்டிகளுடன் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயிைல இந்த தடத்தில் வேகமாக இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ரெயிலானது பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் வந்தபோது 40 கிலோ மீட்டர் வேகத்திலும், தூக்குப்பாலத்ைத அடைந்தபோது குறைவான வேகத்திலும் இயக்கப்பட்டது. பாம்பன் பாலத்தை கடந்த பின்னர் 80 கி.மீ. வேகத்துக்குமேல் ராமநாதபுரம் வரை இயக்கி சோதனை ஓட்டம் ெவற்றிகரமாக நடந்தது.

இதை தொடர்ந்து கோட்ட கூடுதல் மேலாளர் நாகேசுவரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையே 53 கி.மீ. தூரத்திற்கு மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்துவிட்டன. தற்போது சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் ராமேசுவரம் வரை மின்சார ரெயில்கள் இயக்கப்படும். உப்பு காற்றில் துருப்பிடிக்காத வகையிலும், அதிக உறுதித்தன்மை கொண்டதாகவும் மின்கம்பிகள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. தூக்குப்பாலத்தை திறந்து மூடும்போது மின்வழிப்பாதைக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் தூக்குப்பாலம் வடிவமைத்து கட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேரம் மிச்சமாகும்

ராமேசுவரத்துக்கு மதுரையில் இருந்தும், திருச்சி மார்க்கமாக மானாமதுரையில் வழியாகவும் ரெயில்கள் செல்கின்றன. இதில் மதுரையில் இருந்து டீசல் என்ஜினாகவும், திருச்சி மார்க்கமாக வரும்போது மானாமதுரையில் இருந்து மின்சார என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜின் பொருத்தியும் ராமேசுவரத்துக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. தற்போது மின்சார ரெயில் ராமேசுவரம் வரை இயக்கப்பட்டால், இடையில் என்ஜினை கழற்றி மாற்றும் நேரம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story