'தட்கல்' டிக்கெட் எடுக்க குவிந்த ரெயில் பயணிகள்

4 நாட்கள் தொடர்விடுமுறை எதிரொலியாக, தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.
'தட்கல்' டிக்கெட் எடுக்க குவிந்த ரெயில் பயணிகள்
Published on

4 நாட்கள் விடுமுறை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளான ஆயுதப்பூஜை வருகிற 23-ந்தேதியும், அதற்கு மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பாக நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 வாரவிடுமுறை நாட்கள் சேர்ந்து வருகிறது. இதனால் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை ஆகும். எனவே 4 நாட்கள் விடுமுறையையொட்டி வெளியூரில் வசிப்பவர்கள், வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

இதற்காக கடந்த மாதமே சிலர் ரெயிலில் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டனர். எனவே திண்டுக்கல் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட் இல்லை.

முன்பதிவு டிக்கெட் கிடைக்காதவர்கள், தட்கல் டிக்கெட் அல்லது முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து தான் ரெயிலில் பயணிக்க வேண்டியது இருக்கிறது. மேலும் 4 நாட்கள் விடுமுறையை முழுமையாக அனுபவிக்க, இன்று (வெள்ளிக்கிழமை) ரெயில்களில் ஊருக்கு செல்ல வேண்டும்.

தட்கல் டிக்கெட்

எனவே தட்கல் டிக்கெட் எடுக்க நினைத்தவர்கள் ஆன்லைனில் முயற்சி செய்ததோடு, ரெயில் நிலையங்களுக்கும் படையெடுத்தனர். இதில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினமும் சராசரியாக 20 பேர் தட்கல் டிக்கெட் எடுக்க வருவார்கள். ஆனால் நேற்றைய தினம் சுமார் 50 பேர் தட்கல் டிக்கெட் எடுக்க வந்தனர். அதில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட டிக்கெட் எடுப்பதற்கு வந்தனர்.

இதனை அறிந்த ரெயில்வே அதிகாரிகள், பயணிகளை 2 வரிசைகளில் நிற்க வைத்து விரைவாக தட்கல் டிக்கெட் எடுக்க உதவினர். மேலும் தட்கல் டிக்கெட் எடுக்க வந்தவர்களில், ஏஜெண்டுகள் யாராவது இருக்கிறார்களா? என்றும் சோதனை செய்தனர். இதற்கிடையே பலர் வீடுகளில் இருந்தபடி ஆன்லைனில் தட்கல் டிக்கெட் எடுத்ததால், ரெயில் நிலையத்துக்கு வந்தவர்களில் ஒருசிலர் தட்கல் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com