தீ விபத்தால் ரெயில் சேவை பாதிப்பு - சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை சென்டிரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னை திருவள்ளூர் அருகே எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொளுந்துவிட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதுமே கரும் புகை மண்டலம் போல காட்சியளிக்கிறது. ரெயிலில் எரிபொருட்கள் இருப்பதால் தீ மேலும் பரவும் என அஞ்சப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்தத்தும் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். 10 க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்தில் சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடகா மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் 3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. சரக்கு ரெயில் தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே விசாரணக்குழு அமைத்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரெயில் எரிவதை வேடிக்கை பார்க்க யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீ விபத்து காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூரிலிருந்து சென்னை, அரக்கோணம் மார்க்கத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளுக்காக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்டிரலில் இருந்து ஆவடி வரை மட்டுமே புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.






