திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் 9 மணி நேரம் ரெயில் சேவை நிறுத்தம்

தண்டவாள புதுப்பிப்பு பணி காரணமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.
திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் 9 மணி நேரம் ரெயில் சேவை நிறுத்தம்
Published on

திண்டுக்கல்,

தண்டவாள புதுப்பிப்பு பணி காரணமாக திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் 9 மணி நேரம் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

தண்டவாளம் புதுப்பிப்பு

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ரெயில் பாதை வழியாக சென்று வருகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் வழித்தடத்தில் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்ட தண்டவாளத்தை புதுப்பிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி அந்த வழித்தடத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்ட 54 கே.ஜி. எடை கொண்ட தண்டவாளத்தை அகற்றிவிட்டு 60 கே.ஜி. தண்டவாளத்தை பதிக்கும் பணி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள், தண்டவாளத்துடன் இணைக்கப்பட்ட சிமெண்டு சிலிப்பர் கட்டைகளுடன் அவற்றை பெயர்த்து எடுக்கும் பிரத்யேக எந்திரம் ஆகியவை கொண்டுவரப்பட்டன. பின்னர் அந்த கருவிகள் மூலம் பழைய தண்டவாளம் அகற்றப்பட்டது.

ரெயில்வே சேவை மாற்றம்

இதையொட்டி திண்டுக்கல்-கரூர் வழித்தடத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 9 மணி நேரம் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மேலும் அந்த வழித்தடத்தில் செங்கோட்டை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமே பகலில் செல்கிறது. அந்த நேரத்தில் மட்டும் பராமரிப்பு பணி கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் விருதுநகரில் இருந்து வழித்த டம் மாற்றப்பட்டு அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக் குடி, திருச்சி வழியாக கரூருக்கு சென்று, அங்கிருந்து கோவை சென்றது.

இதற்கிடையே சிமெண்டு சிலிப்பர் கட்டைகளுடன் கூடிய 60 கே.ஜி. எடை கொண்ட புதிய தண்டவாளம் பிரத்யேக எந்திரம் மூலம் பதிக்கப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டது. இதன் மூலம் தண்டவாளத்தின் உறுதி தன்மை அதிகரிக்கும், அதிக எடையிலான பொருட்களை சரக்கு ரெயில் மூலம் அந்த வழித்தடத்தில் கொண்டு செல்ல முடியும். பயணிகள் ரெயிலின் வேகத்தையும் அதிகரிக்க முடியும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com