

சென்னை,
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, நாளை (15.04.2026) ஒரு நாள் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னைப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு 23.04.2026 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் 28.03.2026 அன்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, நாளை (15.04.2026) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.
மேலும், இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள் அலுவலக வேலை நாள் என்பதால் நாளை (15.04.2026 புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னைப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு உள்ளூர் விடுமுறையாக அறிவித்து உத்தரவிடப்படுகிறது. அந்நாளினை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 18.04.2026 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.