

சென்னை,
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்துதல், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனில் போட்டி தேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் பின்வரும் போட்டித்தேர்விற்கான பயிற்சி வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது.
TNPSC - Group 1, 2, & 2A முதல் நிலை தேர்விற்கான ஒருங்கிணைந்த நேரடி பயிற்சி வகுப்பு (Offline Class) - திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
மேற்காணும் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் டாக்டர்.சி.பழனி.இ.அ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனவே, விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் (Passport Size Photo) கீழ்க்கண்ட முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அலுவலக முகவரி: மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32. தொலைபேசி எண்: 044-22500134, 9361566648.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.