பயிற்சி நிறைவு விழா: ‘இளம் அதிகாரிகள் சவால்களை எதிர்கொண்டு தாய்நாட்டை காக்க வேண்டும்’

‘இளம் ராணுவ அதிகாரிகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தாய்நாட்டை காக்க வேண்டும்’ என்று சென்னையில் நடந்த ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி அபய் கிருஷ்ணா கூறினார்.
பயிற்சி நிறைவு விழா: ‘இளம் அதிகாரிகள் சவால்களை எதிர்கொண்டு தாய்நாட்டை காக்க வேண்டும்’
Published on

சென்னை,

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) 106-வது பேட்ஜை சேர்ந்த 252 இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அபய் கிருஷ்ணா குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார்.

முன்னதாக பயிற்சி மைய லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் கனல் வரவேற்றார். தொடர்ந்து ராணுவ தளபதி, ராணுவ அதிகாரிகளுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். பதவி பிரமாணத்தின் போது, புதிய ராணுவ அதிகாரிகள் உறுதிமொழி ஏற்று லெப்டினன்ட் கர்னல் பதவியை ஏற்றுக்கொண்டனர்.

பதவி ஏற்பு விழாவில் இளம் ராணுவ வீரர்களை வாழ்த்தி கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அபய் கிருஷ்ணா பேசியதாவது:-

நாடு பாதுகாப்பு தொடர்பான கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. இத்தகைய காலகட்டத்தில் தன்னலமற்ற மற்றும் நாட்டுப்பற்று கொண்ட இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது நாட்டுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும்.

பயிற்சி நிறைவு செய்த இளம் ராணுவ அதிகாரிகள் நாட்டுப்பற்றுடன், கடமையை செய்ய வேண்டும். அதிக பொறுப்புகளை கொண்ட இளம் ராணுவ அதிகாரிகள் நாட்டில் உள்ள பல்வேறு சவால்களை திறமையாக எதிர்கொண்டு தாய்நாட்டை காக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் முதலிடமும், ஒட்டுமொத்த மெரிட் அடிப்படையில் முதலிடமும் பிடித்த சித்தார்த் சிங்குக்கு கவுரவ வாள் பரிசாக வழங்கப்பட்டது. அடுத்த இடத்தை பிடித்த ரவீனே பானியாவுக்கு தங்கப்பதக்கமும், ஒட்டுமொத்த மெரிட் அடிப்படையில், 2-வது இடம் பிடித்த சோனா தேகம்மாவுக்கு வெள்ளிப்பதக்கமும், 3-வது இடத்தை பெற்ற உத்கார்ஸ் சிங் என்பவருக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்பட்டன.

சிறந்த கம்பெனியாக நாவ்ஷெரா கம்பெனி தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மூவர்ண பலூன்கள் வானில் பறக்கவிட்டு, பட்டாசுகள் வெடித்து, பயிற்சியை நிறைவு செய்தவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

பயிற்சி முடித்தவர்களில் 198 ஆண் அதிகாரிகளும், 38 பெண் அதிகாரிகளும் இந்திய ராணுவத்தில் ஒதுக்கப்பட்ட பணிகளில் சேர உள்ளனர். இதுதவிர பூடான், பிஜி தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த 14 ஆண் அதிகாரிகளும், 2 பெண் அதிகாரிகளும், பயிற்சி முடித்து அவர்களுடைய நாடுகளுக்கு செல்கின்றனர். விழாவை காண வந்திருந்த பெற்றோர், தங்களது பிள்ளைகள் இளம் ராணுவ அதிகாரிகளாக பதவியேற்றதை கண்டு மகிழ்ந்தனர்.

கவுரவ வாள் பெற்ற சித்தார்த் சிங் கூறும்போது, நான் எனது பெற்றோரிடம் கவுரவ வாள் பெறுவேன் என்று சத்தியம் செய்திருந்தேன். இப்போது அது கிடைத்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதனை எனது பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

அதேபோல் தங்கப்பதக்கம் பெற்ற ரவீனே பானியா கூறும்போது, பயிற்சியில் தங்க மங்கையாக திகழ்ந்த நான், பணியிலும் தங்க மங்கையாக இருந்து நாட்டுக்கு சேவையாற்றுவேன் என்றார்.

சென்னையை சேர்ந்த பி.டெக். என்ஜினீயர் கார்த்திகா கூறுகையில், நாட்டுக்காக சேவை செய்வதற்காக ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பதவியேற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பிடித்த வேலையை, நாட்டு மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் சிறப்பாக செய்வேன் என்றார்.

பயிற்சி முடித்த ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம், ஜசி நியுகேல் ஆகியோர் கூறுகையில், பலம் நிறைந்த இந்திய ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிலையத்தில் கடின பயிற்சி பெற்றதை பெருமையாக நினைக்கிறோம். இங்கு புதிய தொழில்நுட்பங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டோம். இதற்காக ஆப்கானிஸ்தான் சார்பில் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு நன்றி கூறிக்கொள்கிறோம் என்றனர்.

விழாவில் ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com