

சென்னை,
தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாக்குப்பதிவுக்கு முன்னர் 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சியின்போது வாக்குச்சாவடிகளுக்குள் செயல்படும் விதம் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுதல் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் எடுத்து சொல்லப்படும். அந்தவகையில், அடுத்த மாதம் 2-ம் தேதி பயிற்சி வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இறுதிநாள் ஆகும்.
எனவே தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு பணியிலும் ஈடுபடுவார்கள். அதுமட்டுமல்ல, அன்றைய தினம் பெரிய வியாழன் ஆகும். எனவே கிறிஸ்துவர்கள் மாலையில் தேவாலயங்களுக்கு செல்வார்கள். இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தரப்பில் இந்த பயிற்ச்சிக்கான தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தி உள்ளனர்.