அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தாமதம்

சென்னையில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள் தாமதமாக நாகர்கோவிலுக்கு வந்தன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தாமதம்
Published on

நாகர்கோவில், 

சென்னையில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள் தாமதமாக நாகர்கோவிலுக்கு வந்தன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ரெயில்கள் தாமதம்

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சென்னை தாம்பரத்தில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகிறது.

அதன்படி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டன. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 5 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேர வேண்டும். ஆனால் 40 நிமிடங்கள் தாமதமாக காலை 5.40 மணிக்கு வந்தது. இதேபோல தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயில் காலை 7.10 மணிக்கு வர வேண்டும். ஆனால் 1 மணி நேரம் தாமதமாக நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு காலை 8.14 மணிக்கு வந்தது.

3 மணி நேரம்

இதேபோன்று சென்னையில் இருந்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவிலுக்கு காலை 8.05 மணிக்கு வர வேண்டும். ஆனால் அந்த ரெயில் 3 மணி நேரம் தாமதமாக 11.20 மணிக்கு வந்தது.

இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ரெயில் வந்து சேராததால் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தண்டவாள பராமரிப்பு பணி

திருச்சியில் இருந்து நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கு மதியம் 1.35 மணிக்கு வந்தடையும். ஆனால் நேற்று 2 மணி நேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு நாகர்கோவில் வந்தடைந்தது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

திருச்சி பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரெயில்கள் பல மணி நேரம் தாமதமாக வருகின்றன. இதேபோல் சென்னை சென்ற தென் மாவட்ட ரெயில்கள் பல மணி நேரம் தாமதமாக செல்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com