

சென்னை,
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து த.வெ.க. ஆட்சி பீடத்தில் ஏறியது. பொதுவாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சியினரின் பலத்தை குறைப்பதற்கு முயற்சி செய்வது தமிழகத்திற்கு புதிது அல்ல. இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை த.வெ.க. அரசு முன் எடுத்துள்ளது.
கடந்த 2021 முதல் 2023 ஆம் வரையிலான காலகட்டத்தில், செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பிலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இ.சரவணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் முறைகேடு புகார்கள் மீது சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக புதிதாக விசாரணையை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டனர்.
ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் சிபிஐ, விரைந்து விசாரணையை நடத்தி முடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிபிஐ விசாரணைக்கு, டான்ஜெட்கோ, லஞ்ச ஒழிப்புத் துறை, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் டெண்டர் முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின் விநியோக மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் ரூ.397 கோடி ஊழல் என புகார் எழுந்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரூ.397 கோடி டெண்டர் முறைகேடு புகாரில் வழக்குப்பதிவு செய்தது சிபிஐ.