திருநங்கை இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட கொடூரம்.. உடன் பழகிய வாலிபர் தலைமறைவு


திருநங்கை இரும்பு ராடால் அடித்துக்கொல்லப்பட்ட கொடூரம்.. உடன் பழகிய வாலிபர் தலைமறைவு
x

திருநங்கை கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்


சேலம் பொன்னம்மாபேட்டை மிலிட்டரி ரோடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி ராணி. இவர் பூ கட்டும் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருந்தனர். இவர்களது கடைசி மகன் சரவணன் (வயது 31). கடந்த ஓராண்டாக அவருடைய நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

மேலும் அவர் கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறிவிட்டார். இதையடுத்து தன்னுடைய பெயரை வனிதா என்று மாற்றி கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் வடக்கு ரெயில்வே லைன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கினார்.

நேற்று காலை 9.30 மணியளவில் அவருடைய வீட்டுக்கு அக்காள் மரகதம் சென்றார். அப்போது வீட்டின் கதவில் ஒரு குச்சியை சொருகி அடைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வனிதாவின் செருப்பு வெளியே கிடந்ததை பார்த்த மரகதம், அந்த குச்சியை எடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது வனிதாவின் முகம் துணியால் மூடப்பட்டு இருந்தது. அதனை எடுத்து பார்த்த போது தலையில் ரத்தக்காயங்களுடன் வனிதா கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அவருடைய வாய்க்குள் துப்பட்டா அமுக்கி வைக்கப்பட்டிருந்தது. வனிதாவின் உடலை பார்த்ததும் மரகதம் கதறி அழுதார். அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இது குறித்து தகவல் கிடைத்ததும் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அங்கு திரண்டு வந்து கதறி அழுதனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் சிவராமன், உதவி கமிஷனர் தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கொலை நடந்த வீட்டில் இருந்து போலீசார் இரும்பு ராடு ஒன்றை கைப்பற்றினர். இதையடுத்து திருநங்கை வனிதா இரும்பு ராடால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும் சம்பவ இடத்துக்கு தடயவியல் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். அதைத்தொடர்ந்து வனிதாவின் உடலை அம்மாப்பேட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் குறித்து போலீசார் கூறுகையில், “திருநங்கையான வனிதாவுக்கும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நவீன் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர். அவர்கள் இருவரும் அடிக்கடி இந்த வாடகை வீட்டில் தான் தங்கி உள்ளனர்.

இதனிடையே வனிதா, தான் சம்பாதிக்கும் பணத்தை நவீனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வனிதாவும், நவீனும் வீட்டுக்கு வந்ததை சிலர் பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நவீன் இரும்பு ராடால் வனிதாவின் தலையில் அடித்துக்கொலை செய்ததாக தெரிகிறது.

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வனிதா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகிறோம். வாலிபர் நவீனை வலைவீசி தேடி வருகிறோம். அவரை பிடித்து விசாரணை நடத்தினால் தான் கொலைக்கான முழு காரணம் தெரியவரும்” என்று அவர்கள் கூறினர்.

1 More update

Next Story