அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை: கட்டுமான பொருட்கள் விலை, தொழிலாளர் சம்பளபட்டியல் திருத்தி அமைப்பு

சந்தை விலை நிலவரங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
அரசு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை: கட்டுமான பொருட்கள் விலை, தொழிலாளர் சம்பளபட்டியல் திருத்தி அமைப்பு
Published on

சென்னை,

அரசு கட்டுமான பணிகளுக்கான டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் வகையில், நியாயமான மற்றும் நடப்பு சந்தை விலைக்கு ஏற்ப கட்டுமானப் பொருட்கள், தொழிலாளர் சம்பளம் அடங்கிய விலைப்பட்டியல் திருத்தி அமைக்கப்படுகிறது.

கட்டுமான பணிகள்

அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கு வெளிப்படையான, நியாயமான மற்றும் நடப்பு சந்தை விலைக்கு பொருத்தமான டெண்டர்களை ஈர்க்கும் வகையில், கட்டுமான பொருட்கள் மற்றும் தொழிலாளர் கூலிக்கான விலைபட்டியல் தற்போது திருத்தி அமைக்கப்பட்டு வருகிறது.

விலைப்பட்டியல்

இது அரசு கொள்முதல் விலைகளை நடப்பு சந்தை விலைகளுடன் ஒப்பிடுவதன் மூலம், அனைத்து துறைகளிலும் திட்டச்செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பொதுப்பணிகளுக்கான கட்டுமான பொருட்கள் மற்றும் கூலி விவரங்களை நிர்ணயிக்கும் இந்த விலைப்பட்டியலை மறுஆய்வு செய்யும் பணியை பொதுப்பணித்துறைத் தொடங்கியுள்ளது.

இந்த விலைப்பட்டியல் ஆண்டுதோறும் திருத்தப்பட்டாலும், முந்தைய ஆண்டுகளில் சந்தை நிலவரங்கள் குறித்த விரிவான மதிப்பீடு இல்லாமல், முந்தைய ஆண்டின் விலைகளே தொடரப்பட்டோ அல்லது பெயரளவிலான உயர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டோ இருந்து வந்தன.

நிபுணர்கள் குழு

தற்போது அந்த நிலையை முற்றிலும் மாற்றி, இதற்கான சந்தை விலை நிலவரங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் பொதுப்பணித்துறையின் என்ஜினீயரிங் மற்றும் கட்டுமானப்பிரிவு நிபுணர்கள் குழுவின் மூலம் சிமெண்டு, இரும்பு, நீலக்கல், பி.வி.சி. பொருட்கள் மற்றும் இதர முக்கியப்பொருட்களின் சந்தை விலைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தச்சரின் தினக்கூலி

மேலும், துறை சார்ந்த அட்டவணைகளை இறுதி செய்வதற்கு முன்பு தொழிலாளர்கள் சம்பளமும் மறுஆய்வு செய்யப்பட உள்ளது.

பொதுப் பணித்துறையின் தற்போதைய (அதாவது 2025-26-ன்) விலைப்பட்டியலின்படி, தச்சரின் தினக்கூலி ரூ.1,148, துப்புரவுப்பணியாளரின் கூலி ரூ.609 மற்றும் பெயிண்டரின் சம்பளம் ரூ.904 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1,000 எண்ணிக்கை கொண்ட செங்கல் ரூ.7,887 ஆகவும், சிமெண்டு ஒரு டன் ரூ.5,602 ஆகவும், இரும்பு ஒரு டன் ரூ.55,664 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டங்களின் செலவு குறையும்

பொதுப்பணித்துறையின் நிபுணர் குழு ஒவ்வொரு துறையையும் தனித்தனியாக கலந்தாலோசித்து விலைப்பட்டியலை திருத்தும். இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருத்தத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தும் உள்கட்டமைப்பு திட்டங்களின் செலவுகள் குறையும் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரப்பூர்வ வெளியீடு

மேலும், விலைப்பட்டியலை முழுமையாக சார்ந்திராமல், சந்தை விலைகளை ஒப்பிட்டு துறைகள் டெண்டர்களை தயாரிக்க முடியும் என்றாலும், திருத்தப்பட்ட விலைப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டவுடன் அது அனைத்து டெண்டர்களுக்கும் பொதுவாக பொருந்தும் என்றும், அரசுக்கு கணிசமான சேமிப்பைத்தரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com