போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
Published on

சென்னை

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலகம் ஒரு குடும்பம் என்னும் தத்துவத்தை அடைய உறுதுணையாக, மக்களை இணைப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து துறை. அதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள்.

கொரோனா நோயின் தாக்கம் கொடூரமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும், மருத்துவப் பணியாளர்களுக்காகவும், சுகாதாரப் பணியாளர்களுக்காகவும், அத்தியாவசியக் துறைகளில் பணியாற்றும் அரக ஊழியர்களுக்காகவும் பேருந்துகள் இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் பணி பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது.

தங்களது உயிரைப் பற்றி ஏற்று கவலைப்படாமல் பொதுமக்களுக்கு சேவையில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பலர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 500-க்கும் மேற்பட்ட போக்குவத்துத் தொழிலாளர்கள் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து, மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரைப் போல் போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். அதன் மூலம் முன்களப் பணியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகள் மற்றும் சலுகைகள் போக்குவாத்துத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கும்.

ஒய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டினை விரிவுபடுத்த வேண்டும் என்றும்; பணி ஒய்வு மற்றும் விருப்பப் பணி ஒய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஒய்வுகாலப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்; ஒழுங்கு நடவடிக்கை, நீதிமன்ற வழக்கு போன்ற காரணங்களினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இவர்களுடைய கோரிக்கைகளை மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது, அவற்றில் நியாயம் இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, போக்குவரத்துத் தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிப்பது உட்பட அனைத்துக் கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து, அதற்கான ஆணையினை வெளியிடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com