போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு
Published on

சென்னை,

ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் சிஐடியு, திமுகவின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, அண்ணா நகர் மேற்கு, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பல பணிமனைகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவ மாணவிகளும், பணி நிமித்தமாக செல்லுபவர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள நிலையில், போராட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொமுச பொருளாளர் நடராஜன் கூறும்போது, ஜூன் மாத ஊதியத்தில் நிலுவையில் உள்ள 38 சதவீத தொகை இன்று மாலைக்குள் செலுத்தப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com