

சென்னை,
தேர்தல் முடிந்து தற்போது 5 மாதம் ஆகியும் தேர்தல் காலங் களில் வழங்கப்படும் பயணப்படி போலீசாருக்கு வழங்கப்பட வில்லை. இதனால் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பயணப் படி கிடைக்குமா? என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேர்தல் காலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம், ஊர்வலம், தலைவர்களின் பிரசார பயணங்கள் போன்ற அரசியல் நிகழ்வுகளின்போது பாதுகாப்புக்காக ஒவ்வொரு மாவட்ட போலீசாரும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். ஒவ்வொரு போலீஸ் நிலையத்தில் இருந்தும் மாற்றுப்பணியாக பல போலீசார் இவ்வாறு அனுப்பப்படுகின்றனர்.
இவர்களை தவிர அதிரடிப்படை போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் உள்பட பல்வேறு படை பிரிவுகளில் உள்ள போலீசாரும் சிறப்பு பணியாக இவ்வாறு அனுப்பப்படுகின்றனர். மேலும் தேர்தல் பணியாக வேட்பாளர்களின் மனுத்தாக்கல், வாக்குச்சாவடி பாதுகாப்பு, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணி என்று பல்வேறு பணிகளுக்கும் தொலைதூர மாவட்டங்களுக்கு போலீசார் அனுப்பப்படுகின்றனர்.
இவ்வாறு அனுப்பப்படும் போலீசாருக்கு உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக தினசரி பயணப்படியாக ஒவ்வொருவருக்கும் ரூ.250 முதல் ரூ.400 வரை பதவியை பொறுத்து அரசால் வழங்கப்படும். சட்டமன்ற தேர்தலாக இருந்தால் மாநில அரசும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தால் மத்திய அரசும் அந்த நிதியை வழங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் வரை, இந்த தொகை கணக்கிடப்பட்டு மொத்தமாக ஒவ்வொரு போலீசார் கணக்கிலும் செலுத்தப்படும்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் மார்ச் மாதம் 15-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மே மாதம் 7-ந்தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் முழுமையாக திரும்பப் பெறப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதலே ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 3 ஷிப்டுகளாக 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு, கண்காணிப்பு, வாகன சோதனை பணியில் ஈடுபட்டனர்.
இதற்காக கிரேடு 2 போலீசார் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை இரவு பகலாக பணியாற்றினர். ஒவ்வொரு போலீசாருக்கும் அவர்களின் பதவிக்கு தகுந்தாற்போல் அரசு சுமார் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.21 ஆயிரம் வரை வழங்க வேண்டும். ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு 53 நாட்களுக்கு பயணப்படியை தேர்தல் முடிந்து 5 மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு தேர்தல் முடிந்த 15 நாட்களில் அவர்கள் கணக்கில் இந்த பயணப்படி வரவு வைக்கப்பட்டது. தற்போது 5 மாதங்கள் ஆகியும் இன்னும் பயணப்படி வரவு வைக்கப்படாததால், போலீசார் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பயணப்படியை வழங்க காவல்துறை உயர்அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.