

சென்னை
தமிழக முதல்-அமைச்சர் விஜய் 300 புதிய பஸ்கள் சேவையை தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ந்தேதி நடந்து முடிந்த தேர்தலில், வாக்கு எண்ணிக்கை முடிவில், முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளை வென்று முதல் இடம் பிடித்தது. இந்நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ், வி.சி.க., இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சியமைத்தது. கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்று கொண்டார்.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது த.வெ.க., பெரும்பான்மையையும் நிரூபித்தது. தொடர்ந்து சிங்கப்பெண் அதிரடி படை, 6 முதல் 8-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் விரிவாக்கம், டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில், மொத்தம் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (விழுப்புரம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பக்கோணம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (சேலம்), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கோவை), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (மதுரை), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (திருநெல்வேலி) மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் என 8 அரசு போக்குவரத்துக்கழகங்கள் இயங்கி வருகின்றன.
இதில், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தவிர எஞ்சி உள்ள 7 போக்குவரத்துக்கழகங்களுக்கும், தமிழக அரசு 300 புதிய டீசல் மற்றும் சி.என்.ஜி. பஸ்களை வாங்கி உள்ளது. இந்த புதிய பஸ்கள் முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாளான கடந்த 22-ந்தேதி தொடங்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும் புதிய பஸ்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை 10 மணியளவில் சென்னை தலைமைச்செயலகத்தில் வைத்து இந்த 300 புதிய பஸ்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பெரம்பூர் செல்லும் 29ஏ பஸ்சில் பயணம் மேற்கொண்டார். பஸ்சில் முன் இருக்கையில் அமர்ந்து, தன்னுடைய மொபைல் போனில் வீடியோ எடுத்தபடி சென்றார். அப்போது சாலையோரம் புதிய பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த பஸ்களையொட்டி நின்றிருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அவரை நோக்கி கையசைத்தனர்.
அவரும் ஒரு கையால் மொபைல் போனை பிடித்தபடி, மற்றொரு கையை அசைத்தபடி சென்றார். பஸ்சில், தலைமைச்செயலகம் முதல் கலங்கரை விளக்கம் வரை அவர் பயணம் செய்தபடி சென்றார்.