கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது போலீசில் புகார் செய்ய வேண்டும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

கோவில் நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க கோவில் அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது.
கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது போலீசில் புகார் செய்ய வேண்டும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதுவரை ரூ.1,600 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு, எல்லைக்கல் ஊன்றி கம்பிவேலி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

சட்டதிருத்தம்

கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுவும் இல்லாமலும், உரிய வாடகையை செலுத்தாமலும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனரின் எழுத்து மூலமான புகாரின்பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

ஒவ்வொரு முறையும் கமிஷனர் மட்டுமே புகார் செய்து நடவடிக்கை எடுக்க காலதாமதமாகும் என்பதால், எந்தவொரு தனிநபரும் ஆக்கிரமிப்பாளர் மீது எழுத்துபூர்வமான புகாரை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு அளிக்கும் வகையில் அதன் மீது நடவடிக்கை எடுக்க உரிய சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

போலீசில் புகார்

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்த ஒரு நபரும் புகார் மனு அளிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. எனவே, மாநிலம் முழுவதும் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை சட்டப்படியான உரிமை இல்லாமல் அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து கோவில் நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு விரைந்து ஆக்கிரமிப்புதாரர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

அத்துடன் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை அளித்து, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோவில் அறங்காவலர்கள் அல்லது தக்கார், செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com