

சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 59 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 491 ஆண்கள், 329 பெண்கள் என மொத்தம் 820 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 235 பேரும், கோவையில் 81 பேரும், செங்கல்பட்டில் 55 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், ராமநாதபுரத்தில் தலா 3 பேரும், பெரம்பலூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 41 லட்சத்து 97 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 370 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 58 ஆண்களும், 3 லட்சத்து 25 ஆயிரத்து 278 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர்.
இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த மாதம் டிசம்பர் 23-ந்தேதி வரை தமிழகம் வந்த 2 ஆயிரத்து 300 பேரில், 2,146 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 2,122 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்து கொரோனா பாதிப்பு இல்லாத 2,122 பயணிகளுடன் தொடர்பில் இருந்த 3 ஆயிரத்து 592 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டு வந்த பயணிகளுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 11 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 5 பேரும், மதுரையில் இருவரும், செங்கல்பட்டு, கோவை, நாமக்கல், சேலத்தில் தலா ஒருவரும் என 6 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 12,177 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 971 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
தற்போது சிகிச்சையில் 7 ஆயிரத்து 808 பேர் உள்ளனர். இதில் 16 மாவட்டங்களில் 100-க்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.