மரம் நட திட்டம்: ஜக்கிவாசுதேவின் பணிகளுக்கு தமிழக அரசு துணைநிற்கும் எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஜக்கி வாசுதேவ் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்களை நட திட்டமிட்டு உள்ளார். அவருடைய பணிகளுக்கு தமிழக அரசு துணைநிற்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மரம் நட திட்டம்: ஜக்கிவாசுதேவின் பணிகளுக்கு தமிழக அரசு துணைநிற்கும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Published on

சென்னை,

காவிரி ஆற்றுக்கு புத்துயிரூட்ட காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடந்த ஜூலை மாதம் தொடங்கினார். இதற்காக கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைக்காவிரியில் இருந்து கடந்த 3-ந்தேதி மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய ஜக்கி வாசுதேவ் மைசூரு, பெங்களூரு, ஓசூர், தர்மபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களின் வழியாக நேற்று சென்னை வந்தார்.

இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை பல்கலைக்கழகத்தில் விழா ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகளும் மாசுபடுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டம் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.24.58 கோடி மதிப்பில் 2017-2018-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் பாலாறு ஆற்றுக்கு புத்துயிர் அளிக்கும் திட்டமும் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

மழைநீர் சேகரிப்பு திட்டம் எப்படி மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டதோ அதேபோல் மரங்கள் நட்டு நதிகளைப் பாதுகாக்கும் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக ஒன்றுபட்டு செயல்படுத்த வேண்டும்.

குழந்தைகள் பிறந்தநாள், திருமண நிகழ்ச்சிகள், திருமண ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளின்போது மரக்கன்றுகளை வழங்கினால் இந்த திட்டம் இன்னும் விரிவடையும். மரக்கன்றுகளை முறையாக நட்டு வளர்த்தால் காடு செழிக்கும், நாடு செழிக்கும்.

ஜக்கி வாசுதேவ் 242 கோடி மரங்களை நடுவதற்கு திட்டம் தீட்டி உள்ளார். இது வரவேற்கத்தக்கது. அவர் எடுக்கும் முயற்சிக்கு எங்களுடைய அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஜக்கிவாசுதேவ் பேசியதாவது:- காவிரி என்பது ஒரு நதி அல்ல. 120 உபநதிகள் சேர்ந்து தான் காவிரி ஓடுகிறது. அந்த 120 நதிகளில் இப்போது வெறும் 35 நதிகளில் தான் 9 முதல் 12 மாதங்கள் தண்ணீர் ஓடுகிறது. மற்றவை எல்லாம் வறண்டுவிட்டன. காவிரியும் 5 மாதங்கள் கடலை சென்று சேர்வதே இல்லை.

காவிரியை மீட்பது என்றால் ஒரு நதியை மீட்பது அல்ல. 85 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள காவிரி நதி படுகை முழுவதையும் மீட்க வேண்டும். தமிழக அரசு மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.

நாம் காவிரி நதிப்படுகையில் 242 கோடி மரங்களை நட்டு வளர்த்தால் 9 முதல் 12 டிரில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். தமிழகத்தில் 42 சதவீதம் நிலங்கள் மலடாகிவிட்டன. இந்திய கலாசாரம் விவசாயிகளால் வளர்ந்த கலாசாரம். பல தலைமுறைகளாக வளமாக வைத்திருந்த நம் மண்ணை நாம் இரண்டே தலைமுறைகளில் வளமிழக்க செய்துவிட்டோம்.

தற்போது தமிழகத்தில் 35 ஈஷா நாற்றுப்பண்ணைகள் இருக்கின்றன. இதை ஓரிரு ஆண்டுகளில் 350 நாற்றுப் பண்ணைகளாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். 242 கோடி மரங்கள் நடுவது ஒரு நாள் இரவில் நடந்துவிடாது. 12 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டி உள்ளது. நீங்கள் அனைவரும் அந்த 12 ஆண்டுகள் என்னுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, நடிகை சுஹாசினி ஆகியோர் பேசினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com