தேனியில் அனுமதியின்றி வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்

தேனியில் அனுமதியின்றி புங்கை மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டன. இதுகுறித்து தன்னார்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
தேனியில் அனுமதியின்றி வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்
Published on

வெட்டப்பட்ட மரங்கள்

தேனி என்.ஆர்.டி. நகர் பழைய பத்திரப்பதிவு அலுவலக சாலையில் பிரமாண்டமான மரங்கள் உள்ளன. மாலை நேரங்களில் இங்கு ஏராளமான பறவைகள் வந்து அமரும் போது ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. இன்று காலையில் இந்த சாலையில் பச்சைப் பசேல் என நின்ற புங்கை மரங்களை வெட்டும் பணி நகராட்சி பணியாளர்கள் சிலர் முன்னிலையில் நடந்தது. பருவமழை முன்னேற்பாடு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க என்ற காரணங்களை கூறி அந்த மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணிக்காக போக்குவரத்து திருப்பி விடப்பட்டு இருந்தது. ஆனால், போக்குவரத்தை மாற்றம் செய்ய போலீசார் யாரும் அங்கு பணியில் ஈடுபடவில்லை.

மரங்கள் வெட்டப்பட்டதை பொதுமக்கள் பலரும் வேதனையுடன் பார்த்துச் சென்றனர். இந்நிலையில், தேனியை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் சிலர் அங்கு வந்து மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மரங்கள் வெட்டுவதற்கான அனுமதி கடிதம் பெறப்பட்டதா? என தன்னார்வலர்கள் கேட்டனர். ஆனால், மரங்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டவர்களிடம் மரம் வெட்டுவதற்கான அனுமதி கடிதம் எதுவும் இல்லை.

கலெக்டர் உத்தரவு

இதையடுத்து மரங்கள் வெட்டும் பணியை தடுத்து நிறுத்திய தன்னார்வ இளைஞர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு, அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாகவும், மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெறாமல் மரங்களை வேரோடு வெட்டிய நகராட்சி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ஒரு புகார் மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பெரியகுளம் ஆர்.டி.ஓ.வுக்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.

இதற்கிடையே இந்த மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தேனி நகர செயலாளர் இமயம் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சிலர், தேனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com