டுவிட்டரில் டிரெண்டிங் ஆன “மு.க ஸ்டாலின் எனும் நான்..!”

தமிழகத்தின் 23-வது முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
டுவிட்டரில் டிரெண்டிங் ஆன “மு.க ஸ்டாலின் எனும் நான்..!”
Published on

சென்னை,

சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலினை அறிவித்ததுடன் பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் மு.க ஸ்டாலின் முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மு.க ஸ்டாலின் தலைமையிலான 33 பேர் அடங்கிய அமைச்சரவையும் இன்று பதவியேற்றுக்கொண்டது. முன்னதாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..எனக்கூறி முதல்வராக மு.கஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டனர். முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதும் விழாவில் பங்கேற்று இருந்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் விட்டார்.

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கும் நிகழ்ச்சியை தொலைக்காட்சி நேரலையில் பார்த்த திமுக தொண்டர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். டுவிட்டரிலும் ஸ்டாலின் பதவியேற்பு தொடர்பான செய்திகள் டிரெண்டிங்கில் இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com