பழங்குடியினர் 10 சதவீதம் கூடுதல் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 10 சதவீதம் கூடுதல் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பழங்குடியினர் 10 சதவீதம் கூடுதல் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
Published on

படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்கத்தின் அடிப்படையில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டமானது ஏற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்கி கடன் பெற 12-ம் வகுப்பு தேர்ச்சி என கல்வித்தகுதி தளர்வு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் மானியமும் மாற்றுதிறனாளிகள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதலாக 10 சதவீத மானியமும், வங்கிகள் கொடுக்கும் கடனுக்காக வட்டியில் 3 சதவீதம் மானிய உதவியும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தொழில் முனைவோரின் தொழில் திட்ட தொகை குறைந்தபட்சம் ரூ.10 லட்சத்திற்க்கு மேல் இருக்க வேண்டும், அதிக பட்ச கடன் தொகை ரூ.5 கோடி வரை ஆகும். கடன் பெற விரும்புவோர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயபடிப்பு, தொழில் நுட்ப பயிற்சி (ஐ.டி.ஐ.), தொழில் பயிற்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். பொது பிரிவினருக்கு வயது 35- க்குள் இருக்க வேண்டும். பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், திருநங்கையர், மாற்று திறனாளர்கள், முன்னாள் ராணுவத்தினர் வயது 45-க்குள் இருக்கவேண்டும்.

ஆஸ்பத்திரிகள், பிசியோதரபி மையங்கள், மருத்துவ ஆய்வகங்கள், கட்டுமான உதவி பொருட்கள் வாடகைக்கு விடுதல் மற்றும் நிலம் அகழ்வி (எர்த் மூவர்ஸ்) வாடகைக்கு விடுதல் போன்ற சேவை சார்ந்த தொழில்களுக்கு மானியத்துடன் கடன் உதவி அளிக்கப்படுவது

இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும்.

இந்த திட்டத்தில் கடனுதவி பெறும் நபர்களுக்கு இணையதளம் வழியாக தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த திட்டத்தில் 50 சதவீதம் பெண் தொழில் முனைவோர்களுக்கு ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதிகள் உடைய தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களை பெற காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரில் அணுகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com