மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்: அன்புமணி ராமதாஸ்


மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்: அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 25 Jan 2026 10:50 AM IST (Updated: 25 Jan 2026 12:33 PM IST)
t-max-icont-min-icon

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சென்னை,

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிரீந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”அன்னைத் தமிழுக்காக துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் சுமந்தும், குண்டாந்தடிகளால் தாக்குதலுக்கு ஆளாகியும், சிறைக் கொட்டடிகளில் நோய்வாய்ப்பட்டும் தங்களின் இன்னுயிரை ஈந்தது உள்ளிட்ட மொழிப்போர் ஈகியர்களை நினைவு கூறும் வகையில் மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர்கள் செய்த ஈகங்களை போற்றி வீரவணக்கம் செலுத்துகிறேன். எந்த நோக்கத்திற்காக அவர்கள் தங்களின் உயிர்களை ஈகம் செய்தார்களோ, அந்த நோக்கத்தை அடைவதற்காக தொடர்ந்து போராட நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு எதிராக 1938-ஆம் ஆண்டு மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட போராட்டங்களில் தங்களின் இன்னுயிரை ஈந்த தாளமுத்து, நடராசன், கீழப்பழுவூர் சின்னசாமி, விருகை அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், சிதம்பரம் இராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஈகியர்களின் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி மொழிப்போர் ஈகியர் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் நோக்கம் இந்தித் திணிப்பை எதிர்ப்பது மட்டுமல்ல.... அன்னைத் தமிழை வளர்ப்பதும் ஆகும்.

ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 20 ஆண்டுகளும், தமிழ் கட்டாயப் பயிற்றுமொழி அரசாணை பிறப்பிக்கப்பட்டு 26 ஆண்டுகளும் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை அவை நடைமுறைக்கு வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இது தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து அவற்றின் நோக்கத்தை நிறைவேற்ற கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்பதற்காக 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட 575 எண் கொண்ட அரசாணை சுமார் 50 ஆண்டுகளாக நடைமுறைக்கு வரவில்லை. தமிழாலும், தமிழுக்காக மொழிப்போர் ஈகியர் செய்த ஈகத்தால் ஏற்பட்ட உணர்வாலும் ஆட்சிக்கு வந்தவர்கள் அன்னை தமிழுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகின்றனர். இந்த இரண்டகத்தை மொழிப்போர் ஈகியர்களின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story