திருச்சி: அரசு வேலை என்று போலி நியமன ஆணை வழங்கி 4 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி!

பெண்கள் உள்பட 4 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த டாக்டர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ.16 லட்சம் மோசடி
Published on: 

திருச்சி,

அரசு வேலை என்று போலி நியமன ஆணை வழங்கி பெண்கள் உள்பட 4 பேரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த டாக்டர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரசு வேலை

நாமக்கல் மாவட்டம் முத்துகாட்டுப்பட்டியில் 28 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், அவர் தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் இவர் தனக்கு அரசு வேலை வாங்கித்தரும்படி திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள செந்தில்குமார் (வயது 45) என்பவரை அணுகியுள்ளார். அவர் திருச்சியில் உள்ள டாக்டர் பழனிபாரதி என்பவரை அணுகும்படி கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகில் டாக்டர் பழனிபாரதியை அந்த பெண் சந்தித்துள்ளார். அவர் புரோகிராமிங் மேனேஜர் வேலை வாங்கித்தருவதாக கூறியதை தொடர்ந்து அந்த பெண் ரூ.5 லட்சத்தை டாக்டரிடம் கொடுத்துள்ளார்.

போலி பணி நியமன ஆணை

மேலும் தங்கள் பகுதியில் உள்ள ஒரு பெண் உள்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுக்கக்கூறி ரூ.11 லட்சத்து 59 ஆயிரத்தை டாக்டரிடம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு ஒரு பணி நியமன ஆணையை டாக்டர் கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்டு அந்த அரசு அலுவலகத்துக்கு சென்று கேட்ட போது, அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இதுபற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

டாக்டர் உள்பட 2 பேர் மீது வழக்கு

அதன்பேரில் டாக்டர் பழனிபாரதி, அவருக்கு உடந்தையாக இருந்த செந்தில்குமார் ஆகியோர் மீது திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com