

திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலையோரத்தில் கிடந்த கைப்பையிலிருந்து பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறி சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சாலையோரத்தில் கேட்பாரற்று ஒரு கைப்பை கிடந்துள்ளது. அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், அந்த பைக்குள்ளிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்பதைக் கவனித்து அதிர்ச்சியடைந்தனர்.
சந்தேகமடைந்த பொதுமக்கள் அருகில் சென்று அந்த கைப்பையைத் திறந்து பார்த்தனர். அப்போது, பிறந்து சுமார் 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று துணியில் சுற்றப்பட்ட நிலையில் பைக்குள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.
உடனடியாக குழந்தையைப் பத்திரமாக மீட்ட அப்பகுதி மக்கள், இது குறித்து முசிறி போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிறந்த சில மணி நேரத்திலேயே பச்சிளம் குழந்தையை சாலையோரத்தில் வீசிச் சென்ற கல்நெஞ்சம் கொண்ட பெற்றோர் யார் என்பது குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு முசிறி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.