‘திருச்சி கலைஞர் அறிவாலயத்துக்கு’ நிவாரண பொருட்களை விரைந்து அனுப்பவும் தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அத்தியாவசிய பொருட்களை பிற மாவட்ட தி.மு.க. வினர் திருச்சி கலைஞர் அறிவாலயத்துக்கு விரைந்து அனுப்புமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘திருச்சி கலைஞர் அறிவாலயத்துக்கு’ நிவாரண பொருட்களை விரைந்து அனுப்பவும் தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கஜா புயல் மற்றும் கன மழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்ட மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. பல லட்சக்கணக்கான மரங்களும், பல்லாயிரக் கணக்கான மின் கம்பங்களும் விழுந்து விட்டன. வீடுகளும், கட்டிடங்களும் கடுமையான சேதங்களுக்கு உட்பட்டு, விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அம்மாவட்ட மக்கள் அனைவரும் வரலாறு காணாத வகையில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தங்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று உண்டா என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்திருக்க வேண்டிய அ.தி.மு.க. அரசு, கஜா புயலுக்கு பிறகு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு கட்டமைப்பு நடவடிக்கைகளில் முற்றிலும் தோல்வியடைந்து, கிராமங்கள் தோறும் இருளில் மூழ்கிக் கிடக்கும் அவலநிலை இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது. தானே, ஒகி, வர்தா உள்ளிட்ட பல்வேறு புயல்களால் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியும் இதுவரை அந்த பேரிடர்களில் இருந்து எவ்வித பாடத்தையும் அ.தி.மு.க. அரசு கற்றுக்கொள்ளவில்லை என்பது கண்டனத்திற்குரியது. கஜா புயலுக்கு பிறகு, மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் விளக்கேற்ற மண்எண்ணெய் கூட இல்லாமல் மக்கள் இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆங்காங்கே தி.மு.க. நிர்வாகிகள், உடன் பிறப்புகள் களப்பணியில் இறங்கி தங்களால் இயன்ற நிவாரண உதவிகளைச் செய்து வருகிறார் கள் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும் இது போன்ற பேரிடர் நேரங்களில் இன்னும் முழு வீச்சில் தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் ஈடுபட வேண்டியது நம் கடமையாகிறது.

எனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங் களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவு, உடை, மருந்து, போர்வைகள், குடிநீர் பாட்டில்கள், மண்எண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருள்களை தமிழகத்தில் உள்ள பிற மாவட்ட தி.மு.க. செயலாளர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் திருச்சி கலைஞர் அறிவாலயம் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அங்கிருந்து பாதிக் கப்பட்ட மக்களுக்கு உரிய வகையில் நிவாரணப் பொருட் கள் பிரித்து அனுப்பப்படும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இது மிக அவசரமாகவும், அவசியமாகவும் அக்கறையுடன் ஆற்றிட வேண்டிய பணி என்பதை நினைவூட்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கஜா புயல் குறித்து மத்திய அரசின் துறைகளும், வானிலை ஆய்வு மையமும் அளித்த முன்னெச்சரிக்கை தகவல் களை மாநில அரசின் பேரிடர் மேலாண்மை வாரியம் உடனுக்குடன் வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுரை வழங்கியது. அரசியல் மாச்சரியமின்றி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிப்படையாக பாராட்டி இருந்தேன். அதற்காக விமர்சனங்களும் வெளிப்பட்டன. ஆக்கப்பூர்வமான முயற்சியை ஆதரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் நலன் என்பதுதான் என் பார்வை.

அதே நேரத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட போது தான், புயல் வீசிய அந்த இரவில் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் விடிய விடிய பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்களே தவிர, சரியான முறையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது.

முதல்-அமைச்சராக இருப்பவருக்கு தனது மாநிலத்தின் மக்கள் படும்பாட்டைக் கண்டு இதயம் துடிதுடித்திருக்க வேண்டாமா?. ரிப்பன் வெட்டவும், கொடி அசைக்கவுமான நிகழ்ச்சிகளுக்காக புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடுவதைத் தள்ளிப்போடுகிறார் என்றால் முதல்-அமைச்சருக்கு இருப்பது இருதயமா? இரும்பா? அல்லது உள்ளம் இருக்க வேண்டிய இடத்திலே பெரிய பள்ளம் மட்டுமே உள்ளதா?

தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கடைசிவரை முதல்-அமைச்சர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. இப்போது கஜா புயல் தாண்டவமாடிய நிலையில், வேறு எங்கோ சுற்றிக்கொண்டு, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையை அமைப்போம் என்று முதல்- அமைச்சர் கூறுகிறார் என்றால் விவசாயிகளையும் பொதுமக்களையும் இதைவிட மோசமாக அலட்சியப்படுத்த முடியுமா?. ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனைப்போல சொந்த காரணங்களுக்காக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர்.

எனவே நம்மால் ஆனவற்றைச் செய்வோம். ஆணவத்துடன் செயல்படும் ஆட்சியாளர்கள் அதிலிருந்து பாடம் கற்கட்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்ட மக்கள் தக்க பாடம் கற்றுத் தருவார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com