திருச்சி: போதை ஊசி செலுத்திய இளம்பெண் பலியான வழக்கில் காதலன், நண்பர் கைது - பரபரப்பு தகவல்

காதலன், நண்பர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி: போதை ஊசி செலுத்திய இளம்பெண் பலியான வழக்கில் காதலன், நண்பர் கைது - பரபரப்பு தகவல்
Published on

திருச்சி,

இளம்பெண் சாவு

திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது 19), அவரது காதலி யாஸ்மின் (18), சதாம் உசேனின் நண்பர் ஷேக் அப்துல்லா (19) ஆகியோர் அறை எடுத்து தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் மாலை யாஸ்மினுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறி அவரை மற்ற 2 பேரும் சேர்ந்து தூக்கிக்கொண்டு வந்து, ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.

அங்கு யாஸ்மினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் யாஸ்மினின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதில் யாஸ்மினுக்கு 'டெபன்டாடல்' என்ற போதை மருந்தை அதிக அளவில் ஊசி மூலம் செலுத்தியதால் அவர் உயிரிழந் தது கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது

மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து 7 போதை மாத்திரை அட்டைகள், நீரில் கலக்கிய நிலையில் 2 டீ கப் போதை மருந்து, ஊசி ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சதாம் உசேனையும். ஷேக் அப்துல்லாவையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், யாஸ்மினை கடத்தி சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக சதாம் உசேன், ஷேக் அப்துல்லா ஆகிய இருவரையும் கண்டோன்மெண்ட் போலீசார் நேற்று காலை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

யாஸ்மின் இறப்பு தொடர்பாக போலீசார் தற்போது சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னர் தான் யாஸ்மின் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும். அதன்பின்னரே கைது செய்யப்பட்டவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பரபரப்பு தகவல்

இதற்கிடையே போதை மாத்திரைகள் விற்பனை பற்றியும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஷகிலா பேகம், அவரது மகன் ஜாகீர் உசேன் ஆகியோர் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக அரியமங்கலம் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள். இறந்துபோன யாஸ்மினும் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்தது யார்? என்பது பற்றியும், அந்த கும்பலுடன் இவர்களுக்கு இருந்த தொடர்பு பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com