திருச்சி: காவிரி கரையில் சோழர் கால சிற்பங்கள், கல்வெட்டு கண்டுபிடிப்பு

தட்சிணா மூர்த்தி சிற்பங்கள், கல்வெட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருச்சி: காவிரி கரையில் சோழர் கால சிற்பங்கள், கல்வெட்டு கண்டுபிடிப்பு
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே காவிரி ஆற்றங்கரையோரம் பழங்கால கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு ஆய்வாளர்களான பேராசிரியர்கள் நளினி, அகிலா ஆகியோருடன் வரலாற்று ஆய்வாளர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது தட்சிணா மூர்த்தி சிற்பங்கள், கல்வெட்டு ஆகியவை கண் டெடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள்

அனைத்தும் 10-ம் நூற்றாண்டில் முற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது. இதில் 'ஆலமர்செல்வன்' என்று போற்றப்படும் தட்சிணாமூர்த்தியின் சிற்பம் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. அப்பர் மற்றும் சம்பந்தர் தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படுவது போல, சிவபெருமான் விபூதிப் பையை (பொக்கணம்) கல்லால மரத்தில் மாட்டிவிட்டு உபதேசம் செய்வது போன்ற அரிய காட்சி இதில் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வீணாதாரர் சிற்பம் என்பது முற்கால சோழர் கோவில்களில் மிக வும் அரிதாகக் காணப்படும் கலைநயம் மிக்க சிற்பமாகும். இப்பகுதியில் உள்ள கல்வெட்டை ஆய்வு செய்ததில், 10-ம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்து அமைப்புகள் காணப்படுகின்றன. திரியீங்கோய் மலையில் நந்தா விளக்கு எரிப்பதற்காக சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஒருவர் 120 காசு கள் வழங்கியுள்ளார்.

இந்தக் காசுகளை மகேந்திர மங்கலத்தைச் சேர்ந்த சபையினரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். அவர்கள் அந்த பணத்தைக் கொண்டு வரியற்ற நிலத்தை வாங்கி, அதிலிருந்து வரும் வருவாயைக் கொண்டு விளக்கு 1 எரிக்க ஒப்புக்கொண்டனர் என்ற செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு பழங்காலக் கோவில் இருந்து அழிந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் காணப்படுகின்றன. இந்த அரிய வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு ஆய்வுக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com