

திருச்சி,
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கட்சியாக நாம் தமிழர் கட்சி இருந்து வருகிறது. திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். 2016-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் இந்தக் கட்சி, அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. தொடர்ந்து நடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 6.58 ஆக உயர்ந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 8.2 ஆக அதிகரித்தது.
தேர்தலில் ஒரு அரசியல் கட்சி 8 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றால் மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் நடைமுறை உள்ளது. அந்த வகையில், கட்சி தொடங்கிய 15 ஆண்டுகளில், அதாவது கடந்த ஆண்டு (2025) ஜனவரி 10-ந் தேதி நாம் தமிழர் கட்சிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தது. இந்த நிலையில், வரும் சட்டசபை தேர்தலையும் நாம் தமிழர் கட்சி தனித்தே எதிர்கொள்ள இருக்கிறது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில், திருச்சியில் வரும் 21-ந் தேதி (சனிக்கிழமை) நாம் தமிழர் கட்சி சார்பில் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் களம் காணப்போகும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.
இந்த சூழலில், திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடு வரும் 21ல் திருச்சியில் நடைபெறுகிறது. நாம் தமிழர் கட்சியின் மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள்.
வேட்பாளர்களை மொத்தமாக அறிவித்துவிட்டு தேர்தல் பரப்புரையை முழுவீச்சில் தொடங்குவோம். தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்பட்டவை. இந்த மாதிரியான ஆட்சி முறையை தான் எதிர்பார்க்கிறீர்களா..? 5,000 ரூபாயை நாங்க கேட்கவில்லையே.. இதனை எதைவைத்து கட்டுவீங்க? யாரு காசு இது?
அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளிகள், கல்லூரிகளில் தரம் இல்லை. எங்கள் மக்கள் பிரதிநிதியின் குழந்தைகள் அரசுப் பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்றனர்.
சுற்றுசூழல் பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நீரற்ற நிலமாக பூமி மாறிவிட்டது. மரம் என்பது வெறும் மரம் அல்ல.. அதுதான் நமது உயிர். மரம் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டியது கட்டாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.