

திருச்சி,
ஆந்திர மாநிலத்திலிருந்து கருவாடு ஏற்றி வந்த லாரியில் ரூ.25 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை மறைத்து, தமிழகத்திற்கு கடத்தி வந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருச்சி வழியாக புதுச்சேரிக்கு லாரி மூலம் பெருமளவில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் திருச்சி மாவட்ட எஸ்பி உத்தரவின்படி, சமயபுரம் போலீசார் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்த் (வயது 31), ஜோயல் (வயது 24), திருச்சியைச் சேர்ந்த காமராஜ் (வயது 29), ஒண்டிமுத்துகுமார் (வயது 46) மற்றும் கடலூரைச் சேர்ந்த இதயபாலன் (வயது 33) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, 2 இருசக்கர வாகனங்கள், 5 மொபைல் போன்கள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், ஒடிசா மற்றும் ஆந்திர எல்லைப் பகுதியிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, திருச்சி மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.