திருச்சி நகைக்கடை கொள்ளை: கொள்ளையன் சீராத்தோப்பு சுரேஷ் கோர்ட்டில் சரண்

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தேடப்பட்டு வந்த கொள்ளையன் சீராத்தோப்பு சுரேஷ் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
திருச்சி நகைக்கடை கொள்ளை: கொள்ளையன் சீராத்தோப்பு சுரேஷ் கோர்ட்டில் சரண்
Published on

சென்னை

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில், 13 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடந்த 2 ந்தேதி அதிகாலை 2 மணி அளவில் கடைச்சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கம் மற்றும் வைர நகைகளை அள்ளிச் சென்றனர். பிரபல நகைக்கடையில் நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்டிடத்துக்குள் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அடையாளம் காணமுடியாத அளவிற்கு முகமூடி, கையுறை அணிந்து, உடல் முழுவதும் மூடப்பட்ட உடை அணிந்திருந்தது தெரியவந்தது. ஹாலிவுட் பாணியில் திட்டமிட்டு சுவரில் துளையிட்டு மிக நிதானமாக அங்குலம், அங்குலமாக நகை ரேக்குகளைத் திறந்து நகைகளை எடுத்து பையில் போடும் காட்சி கடையில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

கொள்ளையர்கள் எவ்வித அடையாளத்தையும், சிறிய தடயத்தையும்கூட விட்டு வைக்காமல் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொள்ளையில் வடமாநிலக் கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீஸார் கருதினர். அதை நோக்கி விசாரணை நகர்ந்த நிலையில், வாகனச் சோதனையில் திருவாரூர் அருகே மடப்புரம் மணிகண்டன் என்பவர் சிக்கினார். அவருடன் வந்த சீராத்தோப்பு சுரேஷ் என்பவர் தலைமறைவானார்.

சீராத்தோப்பு சுரேஷ் குறித்த தகவல்களை போலீஸார் விசாரித்தபோது அவர் பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளி மற்றும் உறவினர் என்பது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் சீராத்தோப்பு சுரேசை தேடி வந்தனர். இந்த நிலையில் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com