

சென்னை,
திருச்சி- தாம்பரம் இடையே தஞ்சாவூர், மயிலாடு துறை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலை நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும் என திருச்சி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று திருச்சி-தாம்பரம் சிறப்பு ரெயிலை நிரந்தர ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் தெற்கு ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து திருச்சி- தாம்பரம் சிறப்பு ரெயில் மார்ச் 1-ந்தேதி முதல் நிரந்தர எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயங்கும் என ரெயில்வே போர்டு அறிவித்தது. இதன்படி திருச்சி- தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 16808) திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 5.35 மணிக்கு தனது முதல் பயணத்தை தொடங்கியது.
இந்த ரெயிலானது திருவெறும்பூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக பிற் பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தை அடைந்தது. மறுமார்க்கத்தில் தாம்பரம்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16807) தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருச்சி வந்தடைந்தது.
இந்த ரெயில்கள் வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படுகிறது. செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இந்த ரெயில்களின் சேவை கிடையாது. மொத்தம் 18 பெட்டிகளுடன் ஓடும் இந்த ரெயிலில் முன்பதிவு வசதியும் உண்டு. பகல் நேரத்தில் இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.