சாலை விபத்துகளை குறைக்க பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழிப்பு: போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கட்டுப்பாடு அறைக்கு மாற்றம்

சாலை விபத்துகளை குறைக்க திருநங்கைகள் உதவியுடன் பூசணிக்காய் சுற்றி திரிஷ்டி கழித்த விவகாரம் சர்ச்சையானதால் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவல் கட்டுப்பாடு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சாலை விபத்துகளை குறைக்க பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழிப்பு: போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கட்டுப்பாடு அறைக்கு மாற்றம்
Published on

மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி, மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக அடிக்கடி சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த பகுதிகளில் அதிக அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் அதனை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதிய முயற்சியாக மதுரவாயல் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சிலர் போலீஸ் வாகனத்தில் திருநங்கை ஒருவரை ஏற்றிக்கொண்டு அடிக்கடி விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்படும் பகுதிகளில் பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழத்தை கொண்டு திருஷ்டி கழித்து போட்ட விவகாரம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.

மேலும் சாலைகளில் பூசணிக்காய் உடைக்கக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில், போலீசாரே சாலையின் ஓரத்தில் பூசணிக்காய் உடைத்த சம்பவம் பொதுமக்களிடையே வேடிக்கையை ஏற்படுத்தியது.

இது குறித்து செய்திகள் வெளியானதை தொடர்ந்து, மதுரவாயல் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியை காவல் கட்டுப்பாடு அறைக்கு மாற்றம் செய்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் உத்தரவிட்டார்.

இது குறித்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாலை விபத்துகளை குறைப்பதற்கு அறிவியல் பூர்வமாகவும், தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில், ஆனால் அவரது தனிப்பட்ட நம்பிக்கையின் காரணமாக பூசணிக்காய் உடைத்து திருஷ்டி சுற்றி போடும் நிகழ்வில் ஈடுபட்டுள்ளார். இது தவிர்க்கக் கூடிய செயலாகும் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மதுரவாயல் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com