

கோவை,
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் பிரசாத் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சுவாதி (24) என்பவருக்கும் இடையே காதலர் தினமான கடந்த 14-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மணமக்கள் கோவை சுந்தராபுரத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் மறுவீட்டு அழைப்புக்காக நேற்று காலை ஷியாம் பிரசாத், அவரது மனைவி சுவாதி, ஷியாம் பிரசாத்தின் தந்தை சவுடையன் (62), தாய் மஞ்சுளா ஆகிய 4 பேரும் ஒரு காரில் பொள்ளாச்சி வழியாக தேனி மாவட்டம் போடிக்கு சென்றனர்.
மற்றொரு காரில் அவர்களது உறவினர்கள் சென்றனர். ஷியாம் பிரசாத் கார் சுந்தராபுரம் சிட்கோ பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே டிப்பர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் புதுமாப்பிள்ளை ஷியாம் பிரசாத் மற்றும் அவரது தாய் மஞ்சுளா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். புதுப்பெண் சுவாதி மற்றும் ஷியாம் பிரசாத்தின் தந்தை சவுடையன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.