மொடக்குறிச்சி அருகே லாரி-கார் மோதல்; 5 பக்தர்கள் பலி

லாரியும், காரும் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் தாய்-மகள் உள்பட 5 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மொடக்குறிச்சி அருகே லாரி-கார் மோதல்; 5 பக்தர்கள் பலி
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி முத்துகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 27). இவருடைய மனைவி தேன்மொழி (20). இவருடைய உறவினர் மோகனசுந்தரம். இவரின் மனைவி தெய்வானை (55). இவர்களது மகள் மஞ்சுளா என்கிற புவனேஸ்வரி (19).

இந்தநிலையில் மோகன்குமார், தேன்மொழி, இவரது தம்பி குமரேசன் (17), தெய்வானை, மஞ்சுளா மற்றும் இவர்களது உறவினர்களான அருக்காணி (50), முத்துசாமி (40) ஆகியோர் நேற்று அதிகாலை வாடகை கார் மூலமாக பழனி கோவிலுக்கு புறப்பட்டனர்.

அந்த காரை படையப்பா என்கிற பிரகாஷ் (26) என்பவர் ஓட்டினார். அவர்கள் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

சிவகிரி அருகே பாரப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று பகல் 12.30 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஈரோட்டில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், இவர்கள் வந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கார் முழுவதும் அப்பளம்போல் நொறுங்கியது. இதனால் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறி துடித்தார்கள். சிலர் காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

இதில் கார் டிரைவர் படையப்பா இருக்கையில் இருந்தபடியே இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும், தேன்மொழி, தெய்வானை, அவரது மகள் மஞ்சுளா, அருக்காணி ஆகிய 4 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்கள்.

மேலும் குமரேசன், முத்துசாமி, மோகன்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார்கள்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

விபத்தில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com