

சென்னை,
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் ஆளுங்கட்சி பெற்றுள்ளது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது.
நம்பிக்கையின்றி முதல்வர் விஜய் 2 இடங்களில் போட்டியிட்டார். 2 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் ஒரு இடத்தில் ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், தொகுதி மக்களுக்கு இதுவரை ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் தான் இன்று உங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். காரணம் குடியரசுத்தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதால் தான்.
அதிமுக பிளவு பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நடந்துதான் ட்விஸ்ட். அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதல்-அமைச்சரும் போறாரு. புஷ்பா பட பாணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிளவுபட்ட அதிமுக பிரிவு வீட்டுக்கு முதல்-அமைச்சர் சென்றதை மக்கள் விரும்பவில்லை. ஊழல் சக்தியோடு சேர்ந்த ஆளும்கட்சியை மக்கள் சோசியல் மீடியாவில் விமர்சிக்கின்றனர்.
உங்களுக்கு ஆதரவு தெரிவித்த எங்கள் கூட்டணிகளும் வருத்தத்தில் உள்ளனர். மற்றும் சிலர் கட்சியில் கடன் பெற்று ஆட்சியை நடத்தும் முதல்-அமைச்சர் விஜய், தவறான கருத்துக்களை சொல்லி மக்களை திசை திருப்புகிறார். உங்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் வருத்தப்பட்டுள்ளனர். நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை அரசியல் காரணமாக நிறுத்திவிடாதீர்கள். அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். ரொம்ப காலம் எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். திமுகவின் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15-ம் தேதி உரிமைத் தொகைக்காக மகளிர் காத்துக் கொண்டிருக்கின்றனர். “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள். மக்கள் கேட்பது அது மட்டுமே என்று கூறினார். அதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.