'வாட்ஸ்-அப்' வீடியோ காலில் ஆபாச படம் எடுத்து மிரட்டல்.. நண்பர்களை நம்பிய பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கதி

வீடியோ காலில் ஆபாச படம் எடுத்து மிரட்டிய நண்பர்களை நம்பி பள்ளி மாணவிகள் மோசம் போயினர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 22). அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் செந்தமிழ் (19). இவர்கள் இருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அக்காள்- தங்கைகளான பிளஸ்-2 மாணவிகள் 2 பேருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பேசி பழக தொடங்கிய அவர்கள் சில நாட்களில் அந்த மாணவிகளிடம் ஆபாசமாக பேசி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் வாட்ஸ்அப் வீடியோ காலிலும் பேசி வந்துள்ளனர். அப்போது அந்த மாணவிகளை சரவணன், செந்தமிழ் இருவரும் நிர்வாணமாக நிற்க சொல்லி வீடியோ காலில் படம் பிடித்ததாக தெரிகிறது. பின்னர் அந்த ஆபாச படங்களை காட்டி தாங்கள் சொல்லும் இடத்துக்கு வர வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த ஆபாச படங்களை சரவணன், செந்தமிழ் இருவரும் அவர்களது நண்பர் வெங்கடேஷ் (24) என்பவருக்கு அனுப்பி உள்ளனர். வெங்கடேஷ் அந்த படங்களை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்ததாக தெரிகிறது.
இந்த ஆபாச படங்கள் வாட்ஸ்அப் குழுவில் பரவி வருவதை அறிந்த அந்த மாணவியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக மாணவிகளின் தந்தையிடம் கூறினர். இதுதொடர்பாக மாணவிகளின் தந்தை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், செந்தமிழ், வெங்கடேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






